Tuesday, February 07, 2006

கோணம் - இந்நாட்டு மன்னர்களின் இளைப்பாறுமிடம்.

அது என்ன கோணம்? கணித - வடிவியல் பாடத்தில் படித்த செங்கோணம், குறுங்கோணம் பற்றி பாடமெடுக்கப் போகிறேன் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். என் மண்ணில் உள்ள அதி முக்கியமான ஓர் இடத்தின் பெயர் தான் கோணம். வித்தியாசமாக இருக்கிறதல்லவா? அது என்னமோ தெரியவில்லை இந்த குமரி மாவட்டக் காரர்கள் வித்தியாசமாக தேடித் தேடி தான் இடங்களுக்கு பெயர்கள் சூட்டியிருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. சில இடங்களின் பெயர்களைக் கேட்டால் கண்டிப்பாக சிரிப்பு வரும். உதாரணமாக,

பண்ணிப்பொத்தை, கோழிப்போர் விளை, வட்டம், இஞ்சி விளை, மாமூட்டுக்கடை, கருங்கல்,பேயங்குழி என அப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

இது போன்று ஒரு பெயர் தான் கோணம். இதே பெயரில் குமரி மாவட்டத்தில் ஒரு ஊரும் இருக்கிறது. அது நாகர் கோயிலை அடுத்து உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் அரசு பாலிடெக்னிக்கும் உள்ளது. இதே பெயரில் என் மண்ணில் ஒரு இடத்தின் பெயர். இரண்டையும் தொடர்புபடுத்தி சிந்தித்தால் சிரிப்பு தான் வருகிறது.

ஒரு விதத்தில் ஒரு சிறிய தென்னந்தோப்பு தான் எங்கள் ஊர் கோணம். இந்நாட்டு மன்னர்களை உருவாக்கும் எங்கள் ஊர் அரசு மேல் நிலைப் பள்ளியின் பின் புறம் அமைந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இளைப்பாறும் நந்தவனச்சோலை என்றும் கூறலாம். மதிய வேளையில் பெரும் பாலான மாணவர்கள் தங்கள் மதிய உணவினை இங்கு அமர்ந்து தான் சாப்பிடுவார்கள்; தொடர்ந்து சுகமான ஒரு நித்திரையும்.

வகுப்பிலிருந்து ஆசிரியர்களால் வெளியேற்றப்படும் மாணவர்களுக்கும், வகுப்பினை கட் அடிக்கும் மாணவர்களுக்கும், பிஞ்சிலேயே பழுக்கும் சில அதிகப்பிரசங்கிகளுக்கும் இவ்விடம் ஓர் அற்புதமான புகலிடமாகும்.

இவ்விடம் மற்றொரு விஷயத்திற்கும் பிரசித்தி பெற்றது. சினை(கர்ப்பம்) தரிக்காத மாடுகளை சேர்ப்பதற்காக அதற்கென்றே பழக்கப் படுத்திய ஓர் காளை இங்குண்டு - தேர்ந்த ஓர் காளை சேர்ப்பவனும்(!). அந்த ஆள் உயிரோடு இருந்த வரை கோணமும் பள்ளிக்கூடமும் இரண்டற கலந்திருந்தன. அந்த அளவிற்கு பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டிய மாணவர்களில் ஒரு சிறு பகுதி எப்பொழுதும் இங்கும் காணப்படும். அந்த ஆள் அவர் வளர்த்த காளை குத்தி இறந்ததோடு அக்காளையை விற்று விட்டார்கள். அதோடு கோணத்திற்கு வேலியும் விழுந்து விட்டது. இப்பொழுதெல்லாம் பள்ளிக் கூட மாணவர்கள் இந்தப் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை.

கோணத்திற்கு வேலி விழுந்ததோடு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு கட் அடிப்பது குறைந்ததோ இல்லையோ, ஆசிரியர்கள் கையில் கம்பை எடுத்துக் கொண்டு தினமும் கோணத்தில் மாணவர்களை விரட்டும்(வகுப்பு நேரங்களில்) கண்கொள்ளா காட்சி இப்போது குறைந்து விட்டது.

4 Comments:

Blogger ssthanu said...

I got link to this blog thru http://icarus1972us.blogspot.com/

Happy to see a blog on our native. Can u give more links to Blog relating to Kanyakumari

Keep on updating

8:45 PM  
Blogger ஜுடுவா said...

நண்பர் எஸ் எஸ்தாணு, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது புரியவில்லை. எனினும் என் இடத்திற்கு முதன் முதலில் வருகை புரிந்த தங்களுக்கு என் நன்றி.

12:11 AM  
Blogger ssthanu said...

I wish u to give link to similar blogspots in ur page.

similar means those relating to kanyakumari

bye

s.s.thanu

5:34 AM  
Blogger மா.கலை அரசன் said...

உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். அடிக்கடி எழுதுங்க.

9:30 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது